search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவ மாணவியர்"

    அரியலூர் மாவட்டத்தில் 4,613 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    அரியலூர்:

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    விழாவிற்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மகிமைபுரம் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2,356 மாணவ, மாணவிகளுக்கும், அரியலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2,257 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 4,613 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, திருச்சி ஆவின் துணைத்தலைவர் தங்க.பிச்சைமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (பொறுப்பு) (உடையார்பாளையம்), செல்வராசு (அரியலூர்), வெற்றிச்செல்வி (செந்துறை), பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் சங்கர், முத்தையன், தலைமையாசிரியர்கள் சாமிதுரை, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கரூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் எம்.எஸ்.தேவசகாயம் கலைகள்-கைவினைகள் மையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி கரூர் ஜவகர்பஜார் அருகேயுள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர். 1-3, 4-5, 6-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனிதனியாக போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் இயற்கை காட்சிகள், தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ, மாணவிகள் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தினர். ஓவிய ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், ஓவிய போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கரூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லையரசு வரவேற்று பேசினார். விழாவிற்கு கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் தலைமை தாங்கி, ஓவிய போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில் நாணயவியல்-கல்வெட்டியல் ஆய்வாளர் ராஜூ, பேராசிரியர் மாரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும், கரூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழங்கால உலோக பொருட்கள், மரசிலைகள் உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அவற்றின் வரலாறு, தொன்மை குறித்து அருங்காட்சியக பணியாளர்கள் விளக்கி கூறினார்கள்.
    தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்து அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விபரீத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் துரைமுருகன் தலைமையில் அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று இந்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தல், தேர்வில் தோல்வி அடைதல், கனவுகண்ட மேல்நிலை கல்வியை கற்க வாய்ப்பு இல்லாமல் போதல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு மாணவ-மாணவிகள் விபரீத சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தன்னம்பிக்கை வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்ற துயரங்களுக்கு ஆளாகி மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களோ, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை காணும் மற்றவர்களோ உடனடியாக 104 என்ற இலவச ஆலோசனை தொலைபேசி எண்ணிற்கும், கல்வித்துறையின் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் தங்களின் அருகில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உதவிடலாம் என்ற கருத்துகளை முன்வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த துண்டு பிரசுரங்களை வினியோகித்து விளக்கி கூறினர். 
    ×